"ஒரு கோடிப்பே..! நினைத்தது இரிடியம் - கிடைத்தது செம்பு.. பேராசையால் சிக்கிய கும்பல்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பழைய செம்புக் கலசத்தை இரிடியம் கலந்த கலசம் எனக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற தம்பதியிடம் இருந்து அதனை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் போலீசில் சிக்கியது. அதேநேரம் செம்பு பாத்திரத்தை களவு கொடுத்துவிட்டு, நகை பணம் களவு போனதாக பொய்ப்புகார் அளித்த தம்பதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த வாஸ்துசாலா நகரை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவி - சிவசங்கர் தம்பதி. கடந்த வாரம் ஹட்கோ காவல் நிலையம் சென்ற இந்த தம்பதி, தங்கள் வீட்டுக்கு காரில் வந்த 3 பேர், ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் ஐந்தரை சவரன் தங்க நகையையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் என புகார் அளித்தனர்.
உடனடியாக தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கிய போலீசார், மாவட்டம் முழுவதுமுள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை தம்பதி குறிப்பிட்ட அடையாளங்களுடன் அந்த 3 பேர் கொண்ட கும்பல் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கியது. தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த வல்லரசு, இளையபிரபு, பன்னீர்செல்வம் என்ற அந்த 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தாங்கள் கொள்ளையடித்துச் சென்றது பணமோ, நகையோ அல்ல என்றும் இரிடியம் கலந்த கலசம் என்றும் கூறி, கருமை படிந்த பழைய செம்புக் கலசம் ஒன்றை எடுத்துக் காண்பித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த போலீசார், புகார் கொடுத்த தம்பதியை அழைத்து விசாரித்தனர். அதில் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகின.
போலீசாரால் மீட்கப்பட்ட கருமை படிந்த அந்த செம்புக் கலசத்தில் இரிடியம் கலந்திருப்பதாகக் கூறி, சிவசங்கர் - ஸ்ரீதேவி தம்பதி அதனை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். தெரிந்த ஒரு நபர் மூலமாக தற்போது கைதாகியுள்ள பன்னீர் செல்வம் போனிலேயே தம்பதிக்கு அறிமுகமாகியுள்ளான். இரிடியம் கலந்த செம்புக் கலசம் பெரும் சக்தி வாய்ந்தது என்று ஏகத்துக்கும் பன்னீர் செல்வத்திடம் பில்டப் ஏற்றியுள்ளனர். பன்னீர் செல்வத்தை நேரில் பார்க்காமலேயே கலசத்தை அவரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு பேரம் பேசியிருக்கின்றனர் தம்பதி.
இத்தனை அபூர்வ “இரிடிய” கலசத்தை பணம் கொடுக்காமல் எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என திட்டம் தீட்டிய பன்னீர்செல்வம், கூட்டாளிகள் இருவருடன் சென்று அதனை கொள்ளையடித்துள்ளான். கலசத்தை கொள்ளையடித்துச் சென்றது பன்னீர் செல்வம்தான் என்பது தெரியாமலேயே சிவசங்கர் - ஸ்ரீதேவி தம்பதி போலீசில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து பொய்ப்புகார் அளித்ததற்காக சிவசங்கர் - ஸ்ரீதேவி தம்பதியையும் போலீசார் கைது செய்தனர்.
Comments